February 22, 2023
தண்டோரா குழு
தமிழ் இலக்கிய சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் 24ம் ஆண்டு உலகத் தாய்மொழி நாள் பேரணி கோவையில் நடைபெற்றது.
கடந்த 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலகத் தாய்மொழி நாளாக கொண்டாட அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் இன்று உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் இலக்கிய சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் 24ம் ஆண்டு உலக தாய்மொழி நாள் பேரணி கோவையில் இன்று நடைபெற்றது.
இந்தப் பேரணியை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்,மற்றும் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் சுப்பிரமணியம் தலைமை ஏற்று நடத்தினர். இந்தப் பேரணியை சிரவை ஆதினம் குமரகுருபர அடிகளார் தொடங்கி வைத்தார்.இந்தப் பேரணியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், கல்லூரி முதல்வர்கள்,பேராசிரியர்கள், பல்வேறு தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் துவங்கிய இந்த பேரணியானது, வஉசி மைதானம் வழியாக சென்று நேரு விளையாட்டு அரங்கில் முடிவடைகிறது.இக்கூட்டமைப்பின் சார்பில் இதற்கு முன்னதாக கோவை, தஞ்சை, சிங்கப்பூர் மலேசியா ஆகிய பல்வேறு இடங்களில் உலகத் தாய்மொழி நாள் பேரணி கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.