December 30, 2021 தண்டோரா குழு
தரமற்ற சிமெண்ட் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
இந்திய அரசு வெளியிட்டுள்ள தரக் கட்டுப்பாட்டு சட்டத்தின் படி தரச்சான்று குறியீடு பெற்றுள்ள அனைத்து வகையிலான சிமெண்ட்
தயாரித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரச்சான்று குறியீடு இல்லாத சிமெண்ட் உற்பத்தி செய்வதோ, இருப்பில் வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ கூடாது.
தரக்கட்டுப்பாடு குறியீடு இல்லாமல் சிமெண்ட் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில்மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆணையின்படி, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது எந்த வித
முன்னறிவிப்பும் இன்றி மாவட்ட தொழில் மைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.
ஆய்வின் போது சிமெண்ட் உற்பத்தியாளர்கள், மொத்தமற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பவும்,நிர்ணயிக்கப்பட்ட தர ஆய்வின் படி தரமில்லாத சிமெண்ட் பறிமுதல்
செய்யவும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசு ஆணையை மீறும் நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.