November 24, 2022 தண்டோரா குழு
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த கல்வியாண்டில் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில் மொத்தம் 8 ஆயிரத்து 980 மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ம் வரை பெறப்பட்டது.
இதில், அரசு கல்லூரிகளில் ஒற்றை சாளர கலந்தாய்வின் மூலம் 2 ஆயிரத்து 567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இணைப்புக் கல்லூரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் 2 ஆயிரத்து 858 இடங்களும், நிர்வாக இட ஒதுக்கீட்டின் மூலம் 1,545 இடங்கள் என மொத்தம் 4,413 இடங்கள் நிரப்பபடவுள்ளன.
தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 247 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 120 இடங்களும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் மற்றும் 20 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 15 ஆயிரத்து 111 பேர் மாணவர்கள், 24 ஆயிரத்து 378 பேர் மாணவிகள் ஆவர்.
சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ்,முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 301 மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 7,773 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் 144 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் 1,849 மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிரிவில் 808 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். பழங்குடியினர் பிரிவில் மட்டும் 596 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,கடந்த செப்.30ம் தேதி
தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். இந்நிலையில்,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக போகிறது ஆனால் இன்னும் கலந்தாய்வு நடைபெறவில்லை.
மேலும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து ஆறு மாதங்கள் ஆகியும் வீட்டிலேயே இருப்பதால் மிகுந்த மன உளைச்சலில் மாணவர்கள் உள்ளனர்.இது குறித்து பல்கலைக்கழகம்
தரப்பில் விசாரித்த போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என கூறினார்.
மாணவர்கள் கல்வி கேள்வி ஆகுவதால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கலந்தாய்வை நடத்தி கல்லூரியை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.