November 10, 2022 தண்டோரா குழு
கோவை தெலுங்குபாளையம் வாய்க்கால்பாலம் சோதனை சாவடி அருகே, கோழி தீவனத்தை ஏற்றி கொண்டு வந்த கனரக வாகனம், அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் தரைப்பாள குழியில் இறங்கியதால், அதிலிருந்து மீள முடியாமல் சிக்கியது. இதன் காரணமாக இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தினால், அவ்வழியாக பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்வோர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியின் காரணமாக 2 கிலோ மீட்டர் அளவுக்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பேருந்துகளை விட்டு சாலையில் நடந்து செல்லும் அவலமும் நடந்து வருகிறது.
புல்டோசர் மூலம் தரைப்பால குழியில் இருந்து வாகனத்தை மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, வாகனத்திலிருந்து பொருட்களை இறக்கி வைக்கும் பணியும் நடைபெறுகிறது.தரைப்பாலம் பணிக்காக, மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யவில்லை, செய்திருந்தால் எவ்வித பிரச்சனையும் இன்றி பொதுமக்கள் சென்று வர ஏதுவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.