September 21, 2024 தண்டோரா குழு
கோவையில் ரவுடி ஆல்வின் காவலர் ராஜ்குமாரை கத்தியால் தாக்கியதால், தற்காப்புக்காக ஆல்வின் சுடப்பட்டார் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில்,இன்று சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் காவலர் குடும்பத்தினருக்கு நடைபெற்ற யோகா பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.இந்த நிறைவு விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது இன்று காலை கொடிசியா மைதானத்தில் ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக தெரிவித்தார். காலையில் சுட்டுபிடிக்கப்பட்ட ஆல்வின் கன்னியாகுமரியில் சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரிவித்தார்.
அவர் மீது 3 கொலை,2 கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன என தெரிவித்த அவர், ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார். ஆல்வின் மீது NBW வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஆல்வினை பல்வேறு இடங்களில் மூன்று, நான்கு மாதங்களாக தனிப்படை தேடி வந்தனர் என தெரிவித்தார்.
15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருந்தபோது அவரை தனிப்படை பிடிக்க சென்ற போது தப்பிச் சென்று விட்டதாகவும்,இந்த நிலையில் இன்று அதிகாலை கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கொடிசியா பகுதியில் அவரை காவலர்கள் பிடிக்க முற்பட்டனர் என தெரிவித்தார்.
அப்போது ரவுடி ஆல்வின் ராஜ்குமார் என்ற காவலரை கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக ஆல்வின் சுடப்பட்டார் எனவும் தெரிவித்தார்.சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யார்,யார் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கண்காணித்து வருகிறோம் எனக்கூறிய அவர்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.