September 8, 2017 தண்டோரா குழு
ஓடிஸா மாநிலத்தில் தலை ஒட்டி பிறந்த இரண்டு சகோதரர்களுக்கு புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் தலை பிரிக்கப்பட்டது.
விவசாய தம்பதியினரான ஜெகா மற்றும் பாலியா அவர்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்தன. ஆனால், அந்த குழந்தைகளின் தலை ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்தது.அந்த குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் தான், அந்த இருவரையும் தனியே பிரிக்க முடியும் என்று முடிவு செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி, அந்த இரட்டை குழந்தைகளுக்கு சுமார் 22 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை வெற்றி அடைந்து தற்போது இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர்.
“தற்போது, அந்த இரட்டை குழந்தைகள் அதன் பெற்றோருடன் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்ககிறோம். சில மாதங்களுக்கு பிறகு, அவர்கள் மீண்டும் பரிசோதனைக்கு வரும்போது, மீண்டும் அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்று முடிவு செய்யப்படும்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வறுமையிலிருந்த அந்த சிறுவர்களின் பெற்றோர், தலை ஒட்டி பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க மாநில அரசின் உதவியை நாடினர். அவர்களுடைய நிலையை அறிந்த அரசும், அவர்களுக்கு உதவ முன் வந்தனர்.
“இந்த குழந்தைகளை அழைத்து செல்ல போக்குவரத்து மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்ட மாநில அரசுக்கு என் நன்றியை கூறுகிறேன்”,” என்று அந்த குழந்தைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.