August 15, 2017 தண்டோரா குழு
ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து செல்ல வேண்டிய தொழிலதிபர் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரின் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜான்கோஸ்கி, ஜெர்மனி நாட்டின் கோலோக்னே விமானநிலையத்திலிருந்து இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டேட் விமானநிலையத்திற்கு பயணிக்கும் யூரோவிங்க்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டார். அதில் ஏறி சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். கண்விழித்து பார்த்தபோது, விமானம் வேறு திசையில் செல்வதை உணர்ந்தார்.
உடனே அருகிலிருந்தவரிடம் இதுக்குறித்து விசாரித்தபோது, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு பயணம் செய்துகொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்து, விமானத்திலுள்ள வைபை சேவைக்கு 12 யூரோ தொகையை செலுத்தி, அவருடைய மனைவிக்கு தகவல் தந்துள்ளார். தகவல் அறிந்த அவருடைய மனைவி யூரோவிங்க்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டு, நிலையை தெரிவித்தார்.
சாமுவேல் தனது சொந்த செலவில், லாஸ் வேகாஸ் நகரிலிருந்து மீண்டும் கோலோக்னே நகருக்கு திரும்பி, அங்கிருந்து இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் நகருக்கு திரும்பியுள்ளார்.
“அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகர் விமானநிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்த விமான அதிகாரிகள், என்னை ஒரு குற்றவாளியை போல் நடத்தினர். என்னை ஒரு சிறிய அறையில் அடைத்துவிட்டு, தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஜெர்மனி கோலோக்னே விமான நிலையத்தில் விசா, கடவுச்சீட்டு, விமானத்தில் ஏறும் போர்டிங் பாஸ் ஆகியவை மூன்று முறை சரிபார்க்கப்பட்டது. அப்படியிருந்தும் என்னை எப்படி ஒரு தவறான விமானத்தில் அந்த அதிகாரிகள் ஏற்றினர்?” என்று அவர் தெரிவித்தார்.
“மேலும் ஊழியரின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளோம்” என்று யூரோவிங்க்ஸ் ஏர்லைன்ஸ் அதிகாரி தெரிவித்தார்.