August 23, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவில், தக்க சமயத்தில் தாய்க்கு பிரசவம் பார்த்து, இரு உயிர்களை காப்பாற்றிய, சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்தன.
அமெரிக்காவில் ஜெய்டன் என்னும் சிறுவன் தனது தாயுடன் வசித்து வருகிறான். அவனுடைய தாயார் நிறை மாத கர்ப்பிணி. கழிவறைக்கு சென்றபோது, அவருடைய வயிற்றின் பனிக்குட நீர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனது மகனை அழைத்து அண்டை வீட்டில் வசிக்கும் பாட்டியை அழைத்து வருமாறு கூறினார். அந்த சிறுவனும், பாட்டியிடம் சென்று தாயின் நிலையை கூறியுள்ளான். ஆனால், அவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அவரால் வரமுடியவில்லை.
இதனையடுத்து வீடு திரும்பிய அவன், பாட்டி வர முடியாத நிலையை தெரிவித்தான். குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்ய வேண்டும் என்று அவனுடைய தாய் தெரிவித்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த ஜெய்டன், தாயின் அறிவுறுத்தல்படி, குழந்தையை வெளியே எடுக்க உதவி செய்தான். ஆனால், பிறந்த குழந்தை மூச்சுவிடமால் இருப்பதைக் கண்டான்.
ஜெய்டன் சகோதரி சில நேரங்களில் மூச்சுவிட முடியாத போது, அவனுடைய தாயார், மூச்சு விட உதவும் கருவியை பயன்படுத்துவதை பார்த்துள்ளான். உடனே, அந்த கருவியை எடுத்து வந்து, பிறந்த குழந்தை மூச்சுவிட உதவியுள்ளான்.
ஜெயடனின் பாட்டி அவசர எண் 911 தகவல் தந்ததும், அவர்கள் உடனே சேவை பிரிவை தொடர்புக்கொண்டு தகவல் தந்தனர். உடனே அவர்கள், ஜெயடனின் வீட்டிற்கு வந்தனர். தாய் மற்றும் பிறந்த குழந்தையை, அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.