October 11, 2017 தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் தராபுரம் பகுதிகளில் மழை நீர் மற்றும் தோட்டங்களில் தேங்கி நிற்கும் நல்ல நீரால் டெங்கு அதிகளவில் பரவி வருவதாகவும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
தாராபுரம் கண்ணகி நகரில் வசிப்பவர் குணசேகரன்,இவரது மகள் அருந்ததி(12). தாராபுரம் காங்கயம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 10 நாட்களுக்கு முன் இவரது தம்பி நந்து(10) என்பவருக்கு டெங்கு காய்ச்சல் கண்டு சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.
இதனைத்தொடர்ந்து மாணவி அருந்ததிக்கும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் கடந்த 6ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அருந்ததி பலியானார்.
மாணவி அருந்ததியின் உடல் கடந்த 9 ஆம் தேதி தாராபுரம் எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. தாராபுரம் பகுதியில் இதுவரை 5 பேர் இக்காயச்சலால் உயிரிழந்தும் 15 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும்,அரசு அதிகாரிகளின் மெத்தனமான சுகாதார பணிகளே காய்ச்சல் பரவ காரணம் என்றும்,காய்ச்சல் கண்டு கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலே தாராபுரம் பகுதியிலிருந்தா வருகிறீர்கள் என மருத்துவர்கள் கேட்கும் அளவிற்கு இங்கு சுகாதார பணிகள் கேள்விக்குறியாக உள்ளது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதேபோல கோவை மாவட்டத்தில் டெங்குவிற்கு கடந்த நான்கு மாதங்களில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 44 பேர் இறந்துள்ளனர். மர்மகாய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,அருகிலுள்ள பகுதிகளில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களை வீட்டில் இருந்து வந்து மருத்துவம் பார்த்து செல்லுமாறு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்பவதால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கணபதி செக்கான் தோட்டம் பகுதியில் மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தின் மீது உள்ள தண்ணீர் தொட்டியில் ஏ டி எஸ் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியவதால் அப்பகுதியில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.இதனால் அப்பகுதியைச்சேர்ந்த தாஜ் என்ற 10 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் பொதுக்கழிப்பிடத்தை இடிக்கும் போராட்டத்தை நடத்த செல்லும்போது மாநகராட்சி அதிகாரிகளே இடித்து விடுவதாக உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு குறைவான நபர்கள் மட்டுமே பலியாவதாக கூறி வருகின்றனர்.இது முழுப்பூசணிக்காயை மூடி மறைப்பதாக அமைந்துள்ளது.