January 25, 2018 தண்டோரா குழு
தமிழ்நாட்டில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் இதுவரை பஸ் கட்டணம் இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது.கடைசியாக தமிழக அரசு 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தியது.அதன் பின் 6 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் திடீரென்று தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
அதன்படி, சாதாரண பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.7 ஆகவும், நகர பேருந்துகளில் ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது, அதிநவீன சொகுசு பஸ்சில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் 21 ரூபாயில் இருந்து 33 ரூபாய் ஆகவும், குளிர்சாதன பஸ் கட்டணம் 27 ரூபாயில் இருந்து 42 ரூபாய் ஆகவும், வால்வோ பஸ்சுக்கான கட்டணம் 33 ரூபாயில் இருந்து 51 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது, 30 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கான விரைவு பஸ் கட்டணம் குறைந்தபட்சம் 18 ரூபாயில் இருந்து 27 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.இதுவரை மலைப் பகுதிகளில் சாதாரண பஸ்களில் 6 கி.மீ தூரம் பயணம் செய்ய ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அந்த அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் மற்றும் விரைவு பஸ்களில் 30 கி.மீ தூரத்துக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட 20 ரூபாய் அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, பேருந்து கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டபோது இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வு பற்றி பொதுமக்களிடம் கேட்ட போது,
எட்வின்-கல்லூரி மாணவர்
“நான் கன்னியாகுமரில் இருந்து கோவைக்கு வந்து வேலை பார்க்கிறேன் நேற்று இரவு ஊரிலிருந்து கோவைக்கு ரயிலில் வந்து இறங்கினேன். அங்கிருந்து நான் தங்கி இருக்கும் இடத்துக்கு செல்ல எப்போதும் 9 ருபாய் கட்டணமாக பெறப்படும் அதே போல 9 ரூபாயை கொடுத்தேன். அப்போது நடத்துனர் கட்டணம் 19 ரூபாயாக உயர்ந்துவிட்டதை கூறவே அதை கேட்ட நான் அதிர்ந்து போனேன்.கோவையிலாவது பரவாயில்லை கன்னியாகுமரியில் பஸ் எல்லாமே பழுதடைந்த நிலையில் தான் இருக்கும்.பெட்ரோல் விலையில் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது பேருந்து கட்டணமும் உயர்ந்துள்ளது. இப்படியே போனால் இனி மக்கள் நடந்து தான் போகவேண்டும்.
சமீர்–ஐ.டி ஊழியர்
எங்களை போன்ற பாமர மக்கள் வேலைக்கு போக பெரிதும் நம்பியிருப்பது பேருந்தை மட்டும் தான். தற்போது உயர்ந்துள்ள பேருந்து கட்டணத்தை பார்க்கும் போது பேருந்தில் பயணம் செய்பவர்கள் தான் பணக்காரர்கள் என்ற நிலை வந்து விடும் போல் தெரிகிறது. போக்குவரத்து சுமையை குறைக்க பேருந்து கட்டணத்தை உயர்ந்தி மக்கள் தலையில் கை வைக்காமல் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் உயர்த்தி கொடுத்தீர்களே அதில் இருந்து எடுத்து உங்கள் சுமையை குறைத்து கொள்ளுங்கள்.
சுஷ்மிதா– கல்லூரி மாணவி
தினமும் பேருந்தை நம்பி தினக்கூலிக்கு செல்லும் பொதுமக்கள் தான் இந்த பேருந்து கட்டண உயர்வால் பாதிக்கபட்டவர்கள். அரசிற்கு நிதி இல்லை அதனால் தான் பேருந்து கட்டணம் உயர்வு என்று சொல்லும் அரசு எப்படி எம்.எல்.ஏ.களுக்கு மட்டும் சம்பள உயர்வு பண்ண முடிகிறது, இதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது.
உமா மகேஸ்வரி- கல்லூரி மாணவி
புதிய பஸ் கட்டண உயர்வை பார்க்கும் போது இனி ரயிலியேயோ அல்லது கால் டாக்ஸியிலேயோ போய் விடலாம். அந்த அளவிற்கு கட்டணம் உயர்ந்துள்ளது. குறைந்த கட்டணமுள்ள பேருந்து வரும் என்று காத்திருந்து நேரம் தான் வீணாகிறது. அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் டாஸ்மாக் கட்டணத்தை உயர்த்தி சரி செய்து கொள்ளட்டும் அதற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களை கஷ்டப்படுத்துவதா?
சபரீஷ்-கல்லூரி மாணவர்
என் அப்பா சம்பாதித்து குடும்ப செலவுக்கு தனியாக ஒரு தொகையை ஒதுக்கி நான் தினமும் கல்லூரிக்கு செல்ல 50 ரூபாய் தருவார்.அதை வைத்து பஸ்ஸில் கல்லூரிக்கு சென்று வந்தேன். அதிலேயே தான் என் கல்லூரி செலவுகளை செலவழித்து வந்தேன்.தற்போது உள்ள நிலையை பார்த்தால் 50 ரூபாய் பேருந்து கட்டணத்திற்கே போதாது. இனி அப்பாவிடம் அதிகம் பணம் கேட்டு அவரையும் கஷ்டப்படுத்த முடிவில்லை என்ன செய்வதென்ரே தெரியவில்லை.
சந்தோஷ் – ஐ.டி ஊழியர்
போக்குவரத்து ஊழியர்கள் 6 வருடமாக சம்பள உயர்வு கேட்டு போராடி வருகிறார்கள் என்றால் அதற்காக மக்கள் தலையிலா கை வைப்பது. பேருந்து கட்டணத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள தான் வேண்டும் என்று சொல்லும் அரசியல்வாதிகள் தினமும் பேருந்தில் சென்று வருவதில்லை சொகுஸாக காரில் தான் சென்று வருகிறார்கள். இவர்களை தேர்ந்தெடுத்து நாம் தான் கஷ்டப்படுகிறோம்.