September 26, 2022 தண்டோரா குழு
கோவையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க அரசை கண்டித்தும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சிவானந்தா காலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசியதாவது:
ஆ.ராசாவின் கருத்துகளுக்கு இந்துகளுக்கு உடன்பாடில்லை, இந்துக்கடவுள்களை திமுகவினர் இழிவு படுத்தி வருகின்றார்.இந்து எதிர்ப்பு என்பதை கொள்கையாகவே திமுக வைத்துள்ளனர். இன்று நிலைமை மாறியிருக்கிறது. இந்துக்கள் ஆயிரக்கணக்கான பேர் நின்று திமுகவை எதிர்த்து கேள்வி கேட்போம்.
தமிழகத்தில் பாஜக உள்ளே வந்துவிடுவார்கள் என்ற நிலையில் திமுக.,வினர் பயந்துள்ளனர் அந்தளவிற்கு பாஜக வளர்ச்சி பெற்றுள்ளது. திமுக அரசியல் மேடையில் பேசுவதை, பெண்கள் உட்கார்ந்து கேட்க முடியாது. பாஜகவில் நாகரீகம் இருப்பதால் பெண்கள் உட்கார்ந்து கூட்டத்தில் கேட்க முடியும். தீண்டாமை மிகப்பெரிய கொடுமை. அதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் , பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. திமுக சாதியின் அடிப்படையில் சீட்டு வழங்குகிறது.
சமுதாயத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்களை தூக்கி விட பாஜக இருக்கிறது. பா.ஜ.க.,வினர் சாதிக்கு எதிரானவர்கள். இந்து சமுதாயத்தில் தீய பழக்கம், மூட நம்பிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் போராடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ராமனுஜர் குறிப்பிடத்தக்கவர்.
எல்.முருகனை மாநிலத்தலைவராகவும், பின் மத்திய அமைச்சராகவும் ஆக்கி, அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. திமுகவில் முதல்வர் நாற்காலியில் ஆ.ராசா உட்கார முடியாது. இதுதான் அவர்களின் சமூக நீதி . மதமாற்றத்திற்கு எதிராக மத மாற்றம் தவறானது என டாக்டர் அம்பேத்கர் சொன்னதை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியுமா. ஆ ராசா மதமாற்றத்திற்கு தூண்டுகிறார். இதற்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க வேண்டும்? சகோதர, சகோதரிகளை தவறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
கோவை பாஜக மாநகர் மாவட்ட தலைவரை பொய்யாக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு முதலமைச்சர் அறிக்கை கொடுத்திருக்கிறார். அவரது குடும்ப சேனல்கள் தான் அவரை பாராட்டுகின்றனர். உங்களை எங்கு குளிப்பாட்டி, எங்கு வைத்தாலும் முதலமைச்சர் மாறமாட்டார்.
கோவை மாநகரத்தில் போஸ்டர் ஒட்டக்கூடாது என ஆட்சியர் அனைத்து கட்சி கூட்டம் போட்டார். ஆனால் திமுகவினர் ஒட்டிய போஸ்டருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர், சட்ட விரோதமாக திமுகவினர் வைத்திருக்கக்கூடிய பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க முடியுமா?.
இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.