July 26, 2023 தண்டோரா குழு
மேட்டுப்பாளையத்தில் 5 நாட்களாக குப்பை அள்ளாத நகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக பெண் நகர்மன்ற உறுப்பினர் குடும்பத்துடன் சேர்ந்து வீடு வீடாக குப்பை சேகரித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 11வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவைச் சேர்ந்த ஜம்ரூத் பேகம்.இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல் குடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற தூய்மை பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக வரவில்லை என்று கூறப்படுகிறது இதை அடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அண்மையில் புதிதாக நகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்தவர்கள் இதுவரை போதிய பணியாளர்களை நியமிக்கவில்லை என்பதால் பணிகள் தேக்கமடைந்து வருவதாக தெரியவருகிறது. நகராட்சி நிர்வாகம் பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் வார்டு உறுப்பினர் ஜம்ரூத் பேகம் தானே களத்தில் இறங்கி குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்து வருகிறார்.
மேலும் 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான பழைய சந்தை பேட்டை, மற்றும் கிழக்கு வீதி பகுதிகளில் தனது இரண்டு மகன்களுடன்குப்பை வண்டியுடன் சென்ற நகர்மன்ற உறுப்பினர் ஜம்ரூத் பேகம் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து வருகிறார்.
நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை அறிவுறுத்தியும் குப்பைகளை எடுக்க ஆட்களை அனுப்பாததால் பொதுமக்கள் தன்னிடம் வாக்குவாதம் செய்வதால் மேற்கொண்டு குப்பைகள் தேங்காமல் இருக்கவும் நகரை தூய்மையாக வைக்க திமுக நகர்மன்ற உறுப்பினரான ஜமரூத் பேகம் தனது குடும்பத்துடன் குப்பை அள்ள இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.