September 17, 2024 தண்டோரா குழு
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து அக்குழந்தையை உடனே மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. பிறந்த குழந்தையை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது சவலானதாகும்.
பிறந்து வென்டிலேட்டர் உதவியுடனிருந்த குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆம்புலன்ஸில் நடமாடும் வென்டிலேட்டருடன் முழுமையாக பொருத்தப்பட்ட என்.ஐ.சி.யூ அமைப்புடன், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் என். ஐ.சி.யூ செவிலியரின் தொடர் மருத்துவ கண்காணிப்பில் குழந்தை திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு இரண்டரை மணி நேரத்திற்குள் பிரத்யேக பசுமை வழித்தடம் வழியாக வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டது.
குழந்தைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. Dr. விஜய் சதாசிவம், தலைமையில் Dr. மேன்ப்பிரேட் பெர்னாண்டோ, Dr.நரேந்திரன் மேனன் , Dr. மணிகண்டன் குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.அறுவை சிகிச்சைக்கு பின்னான மருத்துவ பராமரிப்பு Dr. சித்தார்த்த புத்தவரபு, Dr. தேவபிரசாத், Dr. சுஜா மரியம் மேற்பார்வையில் NICUவில் முழு கவனிப்பு மற்றும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மருத்துவர்கள் கூறுகையில்,
அக்குழந்தைக்கு பிறவி இருதய கோளாறு இருந்ததாகவும்,திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டறிந்த உடனே உரிய நேரத்தில் இங்கு அக்குழந்தையை அனுப்பி வைத்ததால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ய முடிந்ததாக தெரிவித்தனர்.நூற்றில் ஒரு குழந்தைக்கு இந்த பிறவி இருதய கோளாறு வருவதாகவும்,வருடத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் இது போன்ற கோளாறால் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மருத்துவர்கள் மரபணு குறைபாட்டால் இது வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் நுரையீரலில் இருந்து வரும் சுத்த ரத்தம் சரியான பகுதிக்கு செல்லாமல் இருந்தால் இது போன்ற பாதிப்புகள் வரக்கூடும் என கூறினர்.
மேலும் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குழந்தையை சரியான நேரத்தில் கொண்டு வருவதை உறுதி செய்வதற்காக பசுமை வழித்தடத் தை திறம்பட ஒருங்கிணைத்த திருச்சி காவல்துறை மற்றும் கோயம்புத்தூர் நகர காவல்துறையினருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றனர்.
இது குறித்து பேசிய குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தை குணமடையும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை எனவும் நல்ல முறையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் கடவுளுக்கு அடுத்தபடியாக டிரைவர் அண்ணா தான் என டிரைவருக்கும் மருத்துவர்களுக்கும் ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கண்கலங்கிய படி நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.