May 20, 2016
தண்டோரா குழு.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் உடல் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியான பாரளிம்பிகில் ஜெர்மனியைச் சேர்ந்த இரு கால்களும் இல்லாத வனேசா லோ என்ற வீராங்கனை கலந்து கொண்டார்.
இவர் 1990ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு 15 வயது இருக்கும்போது ரயிலில் அடிபட்டு இரு கால்களையும் இழந்தார். செயற்கை கால்கள் பொருத்தி எழுந்து நடக்கத் துவங்கிய இவர் கடுமையான பயிற்சியால் பாராலிம்பிக்கில் கலந்து கொள்ளும் அளவிற்கு உயர்ந்தார். இவர் இந்தாண்டு ஜெர்மனி சார்பில் 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க வந்திருந்தார்.
இவர் கடந்த முறை நடைபெற்ற போட்டியில் உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் தங்கி ஐ.பி.சி குரோன் ப்ரீ போட்டிகளில் பங்குபெற்று வந்தார். அதில் நீளம் தாண்டுதல் போட்டியில் 4.65 மீட்டர் நீளம் தாண்டி முதலிடம் பெற்றார். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள தன்னைத் தயார் படுத்திக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில் அவரது செயற்கை கால் காணாமல் போனது. இதையடுத்து இவர் தனது செயற்கை காலை கண்டுபிடித்துத் தருமாறு டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து கூறியுள்ள அவர் கால்கள் காணாமல் போனதால் தான் மனமுடைந்து போனதாகவும், இது போன்ற ஒரு செயலை யாரும் செய்வார்கள் எனத் தான் நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த இரண்டாவது நாள் அவருக்கு அந்தக் கால்கள் மீண்டும் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி அவர் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.