July 6, 2017 தண்டோரா குழு
நொய்டாவில் கைபேசியை திருடிய திருடன் செல்பி எடுத்து, அதை அதன் உரிமையாளருடைய கூகுள் டிரைவ் அக்கவுண்டில் பதிவேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேஷ் மாநிலத்தின் நொய்டா நகரில் மனோஜ் ஷர்மா என்பவர் நொய்டா செக்டர் 1௦ என்னும் பகுதியில், தனது வாகனத்தில் அமர்ந்தவாறு, 2௦,௦௦௦ ரூபாய் விலையை கொண்ட OPPO F3 செல்பி எக்ஸ்பெர்ட் கைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் அவருடைய கைபேசியை பிடிங்கிக்கொண்டு ஓடிவிட்டனர். அவர்களை துரத்திக்கொண்டு ஓடிய அவர் டிராபிக் சிக்னல் அருகே இரண்டு பேரை பிடித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனால், மூன்றாவது நபர் அவருடைய கைபேசியை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து மனோஜ் கூறுகையில், “ என்னிடம் பிடிபட்டவர்கள் லக்கி சிங் மற்றும் சச்சின் சிங் என்று தெரிய வந்தது. இருவரையும் செக்டர் 2௦ பகுதியில் இருந்த காவல்நிலையத்தில் ஒப்படைத்தேன். காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். ஆனால் தப்பியோடிய நபரை பிடிக்க எந்த முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை.
தப்பியோடிய நபர், என்னுடைய கைபேசியை பயன்படுத்தி செல்பி எடுத்து, அதை என்னுடைய கூகுள் டிரைவ் அக்கவுண்டில் பதிவேற்றியுள்ளார். காசியாபாத் நகரின் ஹோட பகுதியில் என்னுடைய கைபேசி கடைசியாக உபயோகப்படுத்தப்பட்டது என்பதை குளோபல் பொசிசனிங் சிஸ்டம் மூலம் கண்டிபிடித்தேன்.” என்று கூறினார்.
காவல்துறை அதிகாரி அருண் குமார் சிங் கூறுகையில், “கைபேசியின் பயன்பாடுகளை கண்காணித்து வருகிறோம். விரையில் அதை கைப்பற்றி, தப்பியோடிய குற்றவாளியை விரைவில் கைதுசெய்வோம்.” என்று கூறினார்.