April 18, 2017
திருட்டு தொழிலில் ஈடுப்பட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கைது செய்யுமாறு மும்பை விரார் நகர் மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மும்பை விரார் நகரின் ராண்டே தலோ பகுதி மக்கள், பல நாட்களாக தங்கள் வீட்டிலுள்ள பொருட்கள் காணமல் போவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த பகுதியில் வசித்து வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பிங்கி என்னும் பெண் தான் அதற்கு காரணம் என்று கண்டுபிடித்தனர். அந்த பெண்ணை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த மறுநாளே தனது வேலையை காட்டி வந்தாள் பிங்கி. இதனால் கோபம் அடைந்த மக்கள் சனிக்கிழமை(ஏப்ரல் 15) விரார் காவல்நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர்.
“ஒரு வீட்டில் திருடிக்கொண்டிருந்த பிங்கியை கையும் களவுமாக பிடித்து, அவளுக்கு நல்ல பாடம் புகட்டவேண்டும் என்று அடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். ஆனால், அவள் மனநிலை பாதிக்கப்பட்டவள் என்று கூறி காவல்துறையினர் விடுவித்தனர்” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பிங்கியை சிறையில் அடைக்காமல், அவளை ஏன் விடுதலை செய்கிறீர்கள் என்று காவல்துறை அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “நாங்கள் ஒவ்வொரு முறையையும் அவளை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வரும் அதே நாளில், அவளுக்கு ஜாமீன் கிடைத்துவிடுகிறது.
மும்பை காவல்துறை கண்காணிப்பாளர் சாரதா ராணி கூறுகையில்,
“அவளை முதல்முறையாக கைது செய்தபோது, மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற காரணத்தால், அவளுடைய கணவரிடம் ஒப்படைத்தோம். மறுபடியும் கைது செய்தபோது, ஜாமீனில் வெளி வந்தாள். நாங்கள் அவளை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தால், தன்னை தானே கடித்துக்கொண்டு தன் உடலில் காயங்களை ஏற்படுத்திக்கொள்கிறாள். நாங்கள் மும்பை நகரின் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புக்கொண்டு, அவளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.