January 24, 2017 தண்டோரா குழு
முறையான குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 3 வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது மண்டலத்தில் அமைந்துள்ள 3-வது வார்டு பகுதிகளான குமரன் காலனி, செட்டிப்பாளையம்,நெசவாளர் காலனி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அந்தப் பகுதிகளில் வாரம் இருமுறை விநியோகிக்க வேண்டிய குடிநீரை மாநகராட்சி 2௦ நாட்களுக்கு ஒரு முறைதான் விநியோகிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவிவருகிறது. இதனால், குடிநீருக்காக குடம் ஒன்றுக்கு 2௦ ரூபாய் வரை செலவு செய்து தனியாரிடம் குடிநீர் வாங்கி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில், “போதிய சாக்கடை வசதி, மின்விளக்குகள் பற்றாக்குறை போன்ற அடிப்படை வசதிகளும் மாநகராட்சி நிர்வாகத்தால் சரிவர செய்து தரப்படவில்லை” என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக 3-வது மண்டல அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், அந்த மனு மீது இது நாள் வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் நம் செய்தி குழுவிடம் (தண்டோரா செய்தி) புகார் தெரிவித்தனர்.
அடிப்படை வசதிகள் மற்றும் முறையான குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள், பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மூன்றாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.