May 23, 2017 தண்டோரா குழு
மத்திய பிரதேஷ் மாநிலத்தின் திங்கள்கிழமை(மே 22) ஒரே இடத்தில் 2,39௦ தம்பதிகளுக்கு நடைபெற்ற திருமணத்தின் போது, 400 அரசு பள்ளி ஆசிரியர்கள் உணவு பரிமாற கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேஷ் மாநிலத்தின் சிங்க்ருளி மாவட்டத்தில் நடந்த பிரமாண்டமான திருமணத்தில் 400 அரசு பள்ளி ஆசிரியர்கள் உணவு பரிமாற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த பிரமாண்ட திருமணத்தில் 2,39௦ தம்பதிகளும் அவர்களுடன் உறவினர்களும் இருந்தனர். அவர்களுக்கு எந்தெந்த ஆசிரியர்கள் என்ன உணவு பரிமாற வேண்டும் என்று எழுதப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“எழுதப்பட்ட உத்தரவு வந்ததும் நாங்கள் என்ன செய்வது? அதற்கு சம்மதம் தெரிவிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது. என்னோடு பணிப்புரியும் சகல ஊழியர்களும் அங்கு இருந்தனர்.
உணவு விடுதியில் பணியாளர்கள் போல் இருப்பது போன்ற எங்களுக்கு தோன்றியது.இது எங்கள் கண்ணியத்திற்கு எதிரானது. ஒரு நிகழ்ச்சியில் உணவு பரிமாறுவது இதுவே முதல் தடவை” என்று பல்ராம் சிங் என்னும் ஆசிரியர் தெரிவித்தார்.
இது குறித்து, சிக்ஸா ஆதியபக் சங்க தலைவர் நீர்ஜா திவேதி கூறுகையில்,
“நான் வெளியூருக்கு சென்றிருந்தால், இந்த சம்பவம் பற்றி எனக்கு தெரியாது. இது ஆசிரியர்களின் கண்ணியத்திற்கு எதிரானது. ஆசிரியர்களுக்கு இப்படிப்பட்ட பணிகளை கொடுப்பதற்கு முன் அதிகாரிகள் யோசிக்க வேண்டும். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாவட்டத்தின் கல்வி அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று மாநிலத்தின் கல்வி மந்திரி தீபக் ஜோஷி உத்தரவிட்டுள்ளார்.