April 28, 2016 தண்டோரா குழு
திருமணங்களை மிகவும் மதித்துப் போற்றி வாழ்வது இந்தியர்களின் மரபு. திருமண வாழ்க்கையை மட்டுமல்ல, திருமண சடங்குகளையும் கூடப் பயபக்தியோடு செய்வது இந்தியர்களின் தனித்தன்மை.
இந்தியாவின் பாரம்பரியமும், விட்டுக்கொடுத்து செல்லும் மனப் பக்குவமும், கூட்டுக் குடும்ப கலாச்சாரமும், நான் என்ற அகங்காரம் இல்லாத உண்மையான அன்பும், இதற்கு முக்கிய காரணங்களாகும்…
ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்புகள் நமது நாட்டின் திருமணங்களையும் விட்டுவைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
மேற்கத்திய நாடுகளில் வேடிக்கையான, அர்த்தமில்லாத காரணங்களுக்காக கூடத் திருமணங்களை நிறுத்துவது பெரிய விஷயமாக யாரும் கருதமாட்டார்கள்.
இதுவே இந்தியாவில், சுமார் இருபது வருடங்களுக்கு முன் திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டு விட்டால் அவை நின்று போவது பெரும் அவமானம் என்று கருதப்படும். பின்பு அந்தப் பெண்ணை வேறு ஒருவர் திருமணம் செய்வதென்பது கேள்விக்குறியானதாகிவிடும். ஆனால், இன்று நிலைமை வேறு……
சொற்ப காரணங்களுக்காக திருமணங்களை நிறுத்துவது இந்தியாவிலும் அடிக்கடி நிகழும் ஒன்றாகிவிட்டது. இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் உத்தர பிரதேஷ் மாநிலத்தின் கிருஷ்ணர் பிறந்த ஊரான மதுராவில் நடந்தது.
திருமண சடங்குகள் வெகு விமரிசையாக நடந்துகொண்டிருக்கும் வேளையில், விருந்து உபசாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது விருந்தில் ஐஸ்கிரீம் திடீரென தீர்ந்து விட்டது. இதில் பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் வாக்குவாதம் தொடங்கியது.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து வாதங்களை எழுப்பப் பின் அதுவே பெரும் சண்டையாக உருமாறியது. பின்னர் வாய்ப் பேச்சு முற்றிக் கல், செங்கல் போன்றவற்றை ஒருவர் மீது ஒருவர் வீசித் தாக்குதல் மேற்கொண்டனர்.
மேலும் திருமண மண்டபத்தை விட்டு வெளியே வந்து நடுரோட்டிலும் சண்டையிடும் நிலைக்கு இரு வீட்டாரும் வந்துவிட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்தும் நின்று போனது.
தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்தனர். ஆனாலும் சண்டையை நிறுத்தாத இரு வீடு உறவினர்கள் வீசிய கற்கள் மற்றும் இதர பொருட்களால் காவல்துறையினருக்கும் காயங்கள் ஏற்பட்டது.
அதையும் போருட்படுத்தாத காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்த பின், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருவீட்டாரும் சமாதனமடையாததால், இரு தரப்பு மீதும் புகார் பதிவுசெய்தனர்.
இதையடுத்து பெண்ணை அழைக்காமல் மாப்பிள்ளை வீட்டாரும், இதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாத பெண் வீட்டாரும் அவரவர்களது வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.
ஒரு ஐஸ்கிரீமுக்காக திருமணமே நிறுத்தப்பட்டு அந்த இடம் பொற்காலம் போல் ஆனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.