January 4, 2017 தண்டோரா குழு
நொய்டாவில் புதுமண பெண் நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நொய்டா காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் புதன்கிழமை(ஜனவரி 4) கூறியதாவது:
புதுதில்லியை அடுத்த நொய்டா நகரில் மனு என்பவருக்கும் கீதா என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் ஃபைரோஸாபாத் நகரில் திருமணம் நடந்துள்ளது. இந்தத் திருமணத்துக்காக இடைத் தரகருக்கு மனு ரூ. 1 லட்சம் கொடுத்திருக்கிறார்.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் லத்தீப்பூர் என்னும் கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கீதாவை அவளுடைய பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கீதாவை அழைத்துச் சென்றனர். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.
செவ்வாய்க் கிழமை கீதாவை அழைத்து வருவதற்காக மனு அவளுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு யாரும் இல்லை. மனு கீதாவுடனும் அவர்களது உறவினர்களுடனும் பேசுவதற்காக கைபேசியில் அழைக்க முயன்றார். ஆனால், அவர்களது கைபேசி எண்கள் அணைக்கப்பட்டிருந்தன.
அதிர்ச்சி அடைந்த மனு உடனே அருகில் இருந்த தன்கௌர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கீதா மற்றும் அவருடைய குடும்பத்தினரை கைது செய்வோம்.
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.