January 17, 2023 தண்டோரா குழு
காவி உடை அணிந்து, பட்டையுடன் திருவள்ளுர் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
உலக பொதுமறை திருக்குறள் கொடுத்த திருவள்ளுவர், மனித இனம் தவிர நாடு மொழி கடந்தவர். 1330 குறளில் மதத்தை பற்றியோ, கடவுளை பற்றியோ அவர் குறிப்பிடவில்லை. திருவள்ளுவரை இந்துவாக காட்டுவது அவருக்கு செய்யும் துரோகம். திருவள்ளுவரை இந்துவாக காட்டிவிட்டு உலகம் முழுவதும் திருக்குறளை கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பேன் என இவர்கள் கூறுவது ஏமாற்று மோசடி. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவள்ளுவரை இந்துவாக காட்டனும் என விரும்புகிறார்.
பாஜகவின் முன்னாள் உத்ரகாண்ட் மாநில எம்பி தருண் விஜய் திருக்குறளை வடமாநிலங்களுக்கு கொண்டு போரேன் என நாடகம் ஆடினார். கண்ணியாகுமரியில் இருந்து வடக்கே காசி கங்கை கரைக்கு திருவள்ளுவரை சிலையை கொண்டு போய் வைக்க அங்குள்ள அகோரிகளும், சாமிகளும் அவரை விடவில்லை. வடக்கே திருவள்ளுவரை ஏற்று கொள்ளவில்லை. திருவள்ளுவரை வள்ளுவர் என்னும் சாதியாக வடநாட்டில் பார்க்கிறார்கள். அதனால் சாமியார்கள், அகோரிகள் அங்கு அவரை ஏற்று கொள்ளவில்லை. வள்ளுவர் என்பது தாழ்ந்த சமூகம் என வடநாட்டு சாமியார்கள் ஒதுக்கினார்கள்.
இப்படி இருக்க திருவள்ளுவருக்கு பட்டை போட்டு தமிழ் மக்களை ஏமாற்றுவது தான் பாஜகவின் வேலை. வடநாட்டில் திருவள்ளுவரை கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. உலகம் முழுவதும் எப்படி கொண்டு போவார்கள். திருவள்ளுவரை இந்துவாக காட்டுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.மக்கள் புரிந்து கொள்வார்கள்.பெரியரும், திராவிட இயக்கமும் தான் கடந்த நூறு ஆண்டுகளில் மக்கள் மன்றத்தில் திருவள்ளுவரை கொண்டு போய் சேர்த்தார்கள். அரசியலுக்காக மதசாயம் பயன்படுத்த வேண்டாம். அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.