March 18, 2017 தண்டோரா குழு
தில்லி கன்டோன்மென்ட் ரயில்நிலையம் அருகில் இரு குண்டுகள் சனிக்கிழமை வெடித்தன. தாஜ்மகால் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் எச்சரித்துள்ள நிலையில் இவ்வாறு குண்டு வெடித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. எனினும் அந்தக் குண்டுகளால் காயமோ சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
“இன்று அதிகாலையில் கன்டோன்மென்ட் பகுதியில் இரு குண்டுகள் வெடித்தது கேட்டது. குண்டு வெடித்த பகுதியில் கிடைத்த தடயங்களை உத்தரப் பிரதேச மாநில தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்” என்று கோட்ட ரயில்வே மேலாளர் பிரகாஷ்குமார் தெரிவித்தார்.
“குண்டு வெடித்தாலும் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. சேதமும் இல்லை. புலன் விசாரணை தொடர்கிறது” என்று போலீஸ் டைரக்டர் ஜெனரல் மகேஷ்குமார் கூறினார்.
ஒரு குண்டு ரயில்நிலையத்திற்கு அருகில் வெடித்தது என்றும் மற்றொன்று அருகில் உள்ள ஒரு வீட்டின் கூரையின் மீது வெடித்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் குண்டு அருகில் உள்ள ரசூல்புரா என்ற இடத்தில் பிளம்பர் வீட்டில் அதிகாலை 5 மணிக்கு வெடித்தது. 45 நிமிடம் கழித்து இன்னொரு குண்டு ரயில்நிலையத்தின் 5வது பிளாட்பாரம் அருகே குப்பைத் தொட்டியில் வெடித்தது.