June 23, 2017 தண்டோரா குழு
சட்டபேரவையில் அமளியில் ஈடுபட்டது தொடர்பான உரிமை மீறல் பிரச்னையில், 7 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யாமல், எச்சரிக்கை விடுத்து, சபாநாயகர் மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவை விதிகளை மீறியதாகவும், அவைக்கு குந்தகம் விளைவித்ததாகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் திமுகவினர் மீது சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து இந்த புகாரை உரிமைக்குழுவுக்கு பரிந்துரை செய்தார் சபாநாயகர்.இது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்கள் செல்வம், மஸ்தான், சுரேஷ் ராஜன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், முருகன் மற்றும் அம்பேத்குமார் ஆகிய 7 உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நேற்று நடைபெற்ற அவை உரிமைக் குழுவில் விவாதிக்கப்பட்டு சபாநாயகருக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையை பரிசீலித்த சபாநாயகர் 7 எம்.எல்.ஏ க்கள் மன்னிப்பு கூறியதாகவும், 7 எம்.எல்.ஏ க்களில் 6 பேர் அவைக்கு புதியவர்கள் என்பதால் எச்சரிக்கை செய்து சஸ்பெண்டை ரத்து செய்வதாக கூறினார்.