October 25, 2021 தண்டோரா குழு
கோவையில் தீபாவளி ஸ்வீட்ஸ், காரம் உள்ளிட்டவற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஸ்வீட்ஸ் கடைகளில் ஸ்வீட்ஸ், காரம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஸ்வீட்ஸ், காரம் உள்ளிட்டவை தரமாக உள்ளதா?, கூடுதல் நிறமிகள் சேர்க்கப்படுகிறதா?, பயன்படுத்திய ஆயில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதா? உள்ளிட்டவை குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தரமான பொருட்களை கொண்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்கவும், தற்காலிகமாக லைசென்ஸ் பெறவும் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து கோவை உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:
இனிப்பு, கார வகைகள் தரமானதாக செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது. சமையல் செய்யும் இடத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஸ்வீட்ஸ், காரம் தயாரிப்பவர்கள், பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபடும் நபர்கள் கைகள், தலையில் உறைகளை அணிய வேண்டும்.
பேக்கிங்கில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் முகவரி, உணவு, பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு எண் உள்ளிட்டவை இருக்க வேண்டும். பால் பொருட்கள் மூலம் தயாரிக்கும் இனிப்பு வகைகளை தனியாக வைக்க வேண்டும். கால அளவு குறித்து லேபிளில் அச்சிட வேண்டும். கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பு குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், உணவு தரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வார்கள். ஆய்வின் போது, உரிமம், பதிவு சான்று பெறாததது தொடர்பாக கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஸ்வீட்ஸ், காரம் போன்றவற்றை வாங்கும் போது கவனம் தேவை.
மேலும், உணவு பொருட்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.