October 3, 2022 தண்டோரா குழு
தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை கண்டுகொள்ளாத தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரையே தூய்மைப்படுத்தும் துப்புரவுப் பணியாளர்கள், அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்காமல் வஞ்சிக்கப்படுகிறார்கள்.ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர்களை தமிழக அரசு கண்டுகொள்ளாதது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பல்லாயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் சேகரமாகும் குப்பையை அகற்றுதல், கழிவுநீர்க் கால்வாய்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள்தான், சுகாதாரத்தின் முதல்நிலைக் காவலர்கள் ஆனால், தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்குவதில்லை.
கோவை மாநகராட்சியில் தனியார் மூலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள தினச் சம்பளம் ரூ.721. ஆனால், ஒப்பந்ததாரர் ரூ.323 மட்டுமே வழங்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, அரசு நிர்ணயித்துள்ள தினச் சம்பளத்தை வழங்க வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உக்கடம், வெரைட்டி ஹால் சாலை, சித்தாபுதூர் ஹவுசிங் யூனிட் பகுதிகளில் இருந்த தூய்மைப் பணியாளர்களின் வீடுகளை இடித்துவிட்ட நிலையில், இன்னமும் புதிய வீடுகள் கட்டித் தரவில்லை. உடனடியாக அவர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித்தர வேண்டும்.
அனைத்துப் பணியாளர்களுக்கும் சீருடை, பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும். வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிப் பணியாளர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகள், பட்டதாரியாக இருந்தாலும்கூட தூய்மைப் பணி மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையை மாற்றி, உள்ளாட்சிகளில் காலி பணியிடங்களில் அவர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
நகர் முழுவதையும் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் குடியிருக்கும் பகுதிகள் தூய்மையற்றதாக உள்ளன. இதனால் பலரும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி, உயிரிழக்க நேரிடுகிறது. அப்பகுதிகளைத் தூய்மைப்படுத்தி, அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.
அவுட்சோர்சிங் முறையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதையும், ஒப்பந்த முறையில் பணியில் சேர்ப்பதையும் கைவிட்டு, அனைவரையும் நிரந்தரப் பணியாளர்களாக்கி, சட்டரீதியான ஊதியம், போனஸ் மற்றும் பிற சலுகைகளை வழங்க வேண்டும். வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். நகர்ப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தூய்மைப் பணியாளர்களை, மீண்டும் மாநகரப் பகுதிகளில் குடியமர்த்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.கோவையில் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்துள்ளது கண்டனத்துக்குரியது.
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, கைது நடவடிக்கை மூலம் அவர்களது போராட்டத்தை முடக்கப் பார்ப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், மக்கள் நீதி மய்யம், தூய்மைப் பணியாளர்களுடன் கரம் கோர்த்துப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும்.
தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர்களின் பரிதாப நிலையைக் கருத்தில்கொண்டு, தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் உரிய தீர்வுகாண வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.