July 3, 2023 தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற தென்னிந்தியா அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி முதலிடத்தை பிடித்து கோப்பையை தட்டி சென்றது.
மாற்று திறனாளிகளின் திறமைகள் மற்றும் சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னிந்தியா அளவிலான வீல் சேர் கூடைப்பந்து போட்டி,கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற இதில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி,ஆந்திரா,கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநில அணிகளை சேர்ந்த வீல் சேர் கூடைப்பந்து விளையாட்டு வீர்ர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில்,கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீர்ர்கள் அசத்தலாக பந்தை லாவகமாக எடுத்து சென்று விளையாடினர்.
மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இடத்தையும், கர்நாடக அணி இரண்டாவது இடத்தையும், பாண்டிச்சேரி அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் இந்த விளையாட்டை பார்வையாளர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.