October 7, 2022 தண்டோரா குழு
தெருக்களில் குப்பைகளை கொட்டும் நபர்களை சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 28வது வார்டுக்குட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டாமல் குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களிடம் அப்பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என முறையாக தினமும் சேகரிக்கப்பட்டு வருகிறதா? என ஆய்வு செய்தார்.மேலும் தெருக்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவாரம்பாளையம் பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் உள்ள குப்பைகள், செடி, கொடிகளை போர்கால அடிப்படையில் தூர்வார உத்தரவிட்டார். பின்னர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ)விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.