June 29, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 77வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ.41.80 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 77வது வார்டுக்குட்பட்ட அய்யாவு பண்ணாடி வீதியில் ரூ.6.80 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல் மற்றும் ஆழ்குழாய் கிணற்று நீர் விநியோக குழாய் பதிக்கும் பணி, சொக்கம்புதூர் அருள்கார்டன் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமானப்பணி ஆகியவற்றை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ரங்கசாமி காலனி, பெரியதம்பி நகர், ராஜரத்தினம் நகர் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் பணி மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஜீவா பாதை மற்றும் அய்யாவு பண்ணாடி வீதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் மற்றும் சிறுபாலம் அமைத்தல் பணி ஆகியவற்றையும் மேயர் தொடங்கி வைத்து பணி விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா,துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர் ராஜலட்சுமி,உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, மண்டல சுகாதார ஆய்வாளர் ராமு, உதவி பொறியாளர் ஏஞ்சலினா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.