January 6, 2024 தண்டோரா குழு
கோவை காளப்பட்டியில் செயல்பட்டு வரும் கோவை ஸ்டேபில்ஸ் பள்ளி மாணவர்கள் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியில் 13 பதக்கங்களை வென்று அசத்தினர்.
காளப்பட்டி டெக் பார்க் அருகில் கோவை ஸ்டேபில்ஸ் என்ற குதிரை பயிற்சி பள்ளி நடைபெற்று வருகிறது. இந்த மையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ரகங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குதிரைகள் உள்ளன.இங்கு 60க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு போபாலில் என்.இ.சி பிரிலிம் & ஜூனியர் ஈக்வஸ்டேரீயன் சாம்பியன்ஷிப் என்ற தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவை ஸ்டேபில்ஸ் மாணவர்கள் 7 பேர் கலந்து கொண்டு 6 பதக்கங்களை பெற்று வந்தனர். மேலும், சிறந்த வீரர் பட்டமும் வென்றனர்.
இதனிடையே 2023ம் ஆண்டுக்கான என்.இ.சி பிரிலிம் & ஜூனியர் ஈக்வஸ்டேரீயன் சாம்பியன்ஷிப் போட்டிகள் டிசம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை பெங்களூரில் நடைபெற்றது. இதில் கோவை ஸ்டேபிள்ஸ் பள்ளியைச் சேர்ந்த ஆராதனா ஆனந்த், ஹர்ஷித் அருண்குமார், விக்னேஷ் கிருஷ்ணா, பிரித்திவ் கிருஷ்ணா, திவ்யேஷ் ராம், அர்ஜுன் சபரி, ப்ரதிக் ராஜ், ஆதவ் கந்தசாமி, ராம் ரெட்டி, அர்மான், தனிஷ்கா, ராகுல் ஆகிய 11 மாணவர்களும் மற்றும் 13 குதிரைகள் கலந்து கொண்டனர்.
மேலும்,கோவை ஸ்டேபிள்ஸ் பள்ளியைச் சேர்ந்த செந்தில்நாதன், ஸ்ரீராம் சண்முகம் ஆகிய பயிற்சியாளர்களும் உடன் சென்றனர். ஷோ ஜம்பிங், டிரசேஜ், ஈவன்டிங் என்ற மூன்று பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்ற நிலையில் கோவை ஸ்டேபில்ஸ் பள்ளி மாணவர்கள் ஷோ ஜம்பிங் பிரிவில் கலந்து கொண்டு 2 தங்கப்பதக்கங்கள்,4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 7 வெண்கலப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
இதுகுறித்து கோவை ஸ்டேபிள்ஸ் நிறுவனர் சரவணன் கூறுகையில்,
“இந்தாண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் நாடு முழுவதிலும் இருந்தும் 450க்கும் மேற்பட்ட குதிரைகளும், 250க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் எங்கள் பள்ளியைச் சேர்ந்த 2 மாணவிகள் மற்றும் 9 மாணவர்கள் என மொத்தம் 11 பேர் கலந்து கொண்டு 13 பதக்கங்களை வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குதிரையேற்ற பயிற்சிக்கு உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் முக்கியம். இதனால் மாணவர்களுக்கு உடற்பயிற்சி மாற்றும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் உடல் நலமும், மன நலமும் ஒரு சேர மேம்படுகிறது. இந்த பயிற்சி பெற்றவர்கள் தங்களது வாழ்வில் சிறந்த இலக்குகளை அடையும் திறன் உடையவர்களாக உருவாகின்றனர்.” என்றார்.
இதனிடையே மாணவர்கள் பெல்ஜியத்தில் நடைபெற உள்ள உலக அளவிலான குதிரையேற்ற போட்டிக்கு தயாராகி வருவதாக கோவை ஸ்டேபில்ஸ் குதிரை பயிற்சி பள்ளி தெரிவித்துள்ளது.