January 25, 2023 தண்டோரா குழு
டேக்வாண்டோ அசோசியேஷன் தமிழ்நாடு சார்பாக மாநில அளவிலான போட்டி தூத்துக்குடியில் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில்,கோவை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட கோவை தேக்குவாண்டோ அகாடமி மாணவர்கள் பிரனேஷ், தர்ஷினி, சுமந்தா, ஆகிய மூன்று பேர் தங்கப்பதக்கம் வென்று தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.
இதையடுத்து, இந்தியா டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பாக தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாநில அளவில் தங்கம் பதக்கம் வென்ற பிரனேஷ், தர்ஷினி, சுமந்தா ஆகிய மூவரும் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டனர். மேலும், இப்போட்டியில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் பிரனேஷ் 12 வயது உட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு தனிநபர் பிரிவில் 1 தங்கமும், இணைப் பிரிவில் 1 வெண்கலப் பதக்கமும் வென்றார்.14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட தர்ஷினி தனிநபர் பிரிவில் 1 வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்ற பிரனேஷ் மற்றும் தர்ஷினி சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
தமிழக அணி சார்பாக மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர் அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பிரனேஷ் மட்டுமே தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களை கோவை டேக்வாண்டோ அகாடமியில் கிராண்ட் மாஸ்டர் முத்தப்பா, தலைவர் ஆர். என் ரஞ்சித் மற்றும் பயிற்சியாளர் நிர்மல் ஆகியோர் பாராட்டினர்.