September 6, 2022 தண்டோரா குழு
தேசிய அளவிலான 11வது வேளாண்மைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. விவசாயிகள் முழுஒத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:
நம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வேளாண் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஒரு பகுதியான உலக வேளாண்மைக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி இந்தியாவில் 1970-71 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
10வது கணக்கெடுப்பு 2015-16இல் முடிவடைந்து, 2020-21இல் நடைபெற வேண்டிய 11வது கணக்கெடுப்பு கொரானோ காரணமாக 2021-22இல் நடைபெறவுள்ளது.இக்கணக்கெடுப்பிற்கு மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், வருவாய் துறை மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கெடுப்பாளர்களாகவும், வருவாய் துறை மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலர்கள் மேற்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்கணக்கெடுப்பு மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டப்பணியானது செப்டம்பரில் துவங்கி டிசம்பரில் முடிக்கப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நில உரிமையாளர்கள், சாகுபடியாளர்களின் எண்ணிக்கையும் அவர்களின் நிலப்பரப்பும் சமூகப்பிரிவும், விவசாயம் செய்யும் முறையும் கிராம நிர்வாக அலுவலர்களால் சேகரிக்கப்படும். முதல் கட்டப்பணி நிறைவடைந்த பின்னர், இரண்டாம் கட்ட பணி ஒவ்வொரு வட்டத்திலும் எதேச்சை முறையில் தேர்விடப்பட்ட 20 சதவிகித கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட சர்வே எண்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரம், இரகம், நீர்பாய்ச்சப்பட்டதா, மானாவாரியா, நீர்பாய்ச்சும் முறை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இரண்டாம் கட்டப்பணி முடிவடைந்த பின்னர் மூன்றாம் கட்டப்பணியாக ஒவ்வொரு வட்டத்திலும் எதேச்சை முறையில் தேர்விடப்பட்ட 7 சதவிகித கிராமங்களில் வேளாண்மைக்கு உபயோகப்படுத்தப்பட்ட இயற்கை, செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உபயோகித்த விவசாய சாதனங்கள், அரசு மான்யம், மண்ணின் தன்மை, விவசாயிகளின் குடும்ப விவரங்கள், பொருளதார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். இவ்விவரங்கள் வேளாண்துறை சார்ந்த கொள்கை மற்றும் திட்டமிடலுக்கும் வேளாண்துறையின் வளர்ச்சி குறித்து ஆராயவும் முக்கிய பங்களிக்கிறது.
இத்தகவல்கள் முதல் முறையாக கையடக்க கணினி, மடிகணினி அல்லது செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்படும். விவசாயிகள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பேணப்படும். இத்தகவல்கள் அளிப்பதால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் கிராம நிர்வாக அலுவலர்களால் கோரப்படும் விவரங்களை வழங்கி இக்கணக்கெடுப்பு சிறப்பாக நடைபெற அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.