June 7, 2023 தண்டோரா குழு
மத்திய அரசின் கல்வி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அமைச்சர் Dr. ராஜ்குமார் ரஞ்சன் சிங் தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை புதுடெல்லியில் 05.06.2023 அன்று வெளியிட்டார் . இதில் 8686 உயர்கல்வி நிறுவனங்கள் வெவ்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டன. இதில் 2478 உயர்கல்வி நிறுவனங்கள் பொதுப்பிரிவில் கலந்து கொண்டன.
மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு ( என்.ஐ.ஆர்.எப் ) 2016 முதல் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தரவரிசையை வெளியிட்டு வருகிறது.எட்டாவது முறையாக 2023 ம் ஆண்டிற்கு நடத்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்குள் 30 வது இடமும்,அகில இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான முதல் 50 இடங்களில் 43 வது இடமும் பெற்றுள்ளது.
மேலும்,2478 உயர்கல்வி நிறுவனங்களுக்குள் அழகப்பா பல்கலைக்கழகம் 56 வது இடத்தைப் பெற்றுள்ளது.தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையிலும் , பல்கலைகழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவரிசையிலும் அழகப்பா பல்கலைகழகம் 3 வது இடத்தைப் பெற்றுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு ( என்.ஐ.ஆர்.எப் ) கற்பித்தல் மற்றும் கற்பதற்கான வளங்கள் ( Teaching Learning and Resources ) , ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி ( Research and Professional Practice ), பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் தேர்வு முடிவுகள் ( Graduation Outcomes ), சர்வதேச வெளிப்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ( Outreach and Inclusivity ) , கருத்துக் கணிப்புகள் ( Perception ) ஆகிய 5 குறிப்பிட்ட பகுதிகளின் கீழ் மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்தியுள்ளது .
மேலும் ஆராய்ச்சி வெளியீடுகள் ( Publications ),அதிகமான மேற்கோள்களையும் ( Citations ) கணக்கில் எடுத்துக் கொண்டு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.என்.ஐ.ஆர்.எப் . 2023 தரவரிசைப் பட்டியலில் பல்கலைக்கழக தரவரிசைப் பிரிவின் இயக்குநர் ஜெ . ஜெயகாந்தன் மற்றும் குழவினர் 2023 க்கான தரவுகளை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துறை மற்றும் நிர்வாகப் பிரிவுகளிடமிருந்து சேகரித்து சமர்ப்பித்தனர்.கலந்துகொள்வதற்காக இப்பல்கலைக்கழகம் தேசிய தர நிர்ணய குழுவால் வழங்கப்பட்ட ஏ பிளஸ் அங்கீகாரம் , க்யூ.எஸ் தரவரிசையில் ஆசிய அளவில் 251-260வது இடமும், டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 401-500வது பிரிவிலும்,டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட இளம் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் 138 வது இடமும் மேலும் இந்நிறுவனத்தால் ஆசிய அளவில் பல்கலைகழகங்களுக்கான தரவரிசையில் 122 வது இடத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அழகப்பா பல்கலைக்கழகம் உயர்ந்த தரவரிசை பெறுவதற்கு உழைத்த பேராசிரியர்கள் , அலுவலர்கள்,ஆராய்ச்சி மற்றும் முதுகலை மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.க.ரவி பாராட்டினார்கள்.