April 11, 2025
தண்டோரா குழு
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.
மார்ச் 28 முதல் 31, 2025 வரை ஹரியானாவில் நடைபெற்ற 21வது மூத்த, ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் எலீட் – டவுன்ஹில் (Downhill) பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் திலோத்தம்மா.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று சித்தாபுதூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.இதில் திலோத்தம்மா மற்றும் அவர் பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் கலந்துகொண்டனர்.இந்த அதிக ஆபத்தான டவுன்ஹில் பிரிவில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் வீராங்கனை இவர் தான். இந்த பிரிவு மிகவும் கடுமையானது; நாட்டில் ஏறத்தாழ 3-4 பெண்கள் மட்டுமே இதில் பங்கேற்கிறார்கள், என அவரின் பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் கூறினார்.
இந்த டவுன்ஹில் போட்டி ஹரியானாவின் மோர்னி ஹில்ஸ் எனும் பரந்த மலைப்பகுதியில் மிகவும் சவாலான பாதையில் நடைபெற்றது. வழக்கமான 1 கி.மீ பாதையைவிட இந்த வருடம் 2 கி.மீ தூரம் கொண்ட டிராக், வீரர்களின் திறமைக்கு சவாலாக விடும் விதத்தில் இருந்தது என திலோத்தம்மா கூறினார்.
மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தன்னுடன் போட்டியிட்ட நிலையில், திலோத்தம்மா 5 நிமிடம் 45 வினாடிகளில் அந்த 2 கி.மீ. தூரத்தை கடந்து முதலிடம் பெற்று தங்கபாதகத்தை தட்டிச்சென்றார்.
“ டவுன் ஹில் சைக்ளிங் போட்டிகளில் கடுமையான பாதைகள் இருக்கும். அதை கடப்பது பற்றி முடிவுகளை நாம் சிறிது நேரத்திலேயே எடுக்கவேண்டும். எனவே இந்த போட்டிகளில் கலந்துகொள்ள மிகுந்த கவனமும் தைரியமும் தேவைப்படுத்தியது,” என்கிறார் திலோத்தம்மா.
வேலூரைச் சேர்ந்த இவரை இவரின் தாய் மட்டுமே உடன் இருந்து கவனித்துக்கொள்கிறார்.சைக்ளிங் மீது பல போட்டிகளில் கலந்து கொண்ட இவர் டவுன் ஹில் போட்டிக்காக கடந்த ஒரு ஆண்டு காலமாக பயிற்சி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் மலைபகுதிகளில் பயிற்சி செய்ய கட்டுப்பாடுகள் இருப்பதால், தனியார் எஸ்டேட்டில் அனுமதி பெற்று பயிற்சி மேற்கொண்டதாக அவரும் அவரின் பயிற்சியாளரும் தெரிவித்தனர்.
தன்னுடைய வெற்றிக்கு தன் தாய், பயிற்சியாளர் கோகுல், தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன், மற்றும் கோவை நேரு கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. கிருஷ்ணகுமார் ஆகியோரின் ஆதரவு காரணம் என கூறுகிறார்.
“தமிழ்நாடு சைக்கிள் அசோசியனில் இருந்து புள்ளிகள் கிடைத்ததும், நான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற வாய்ப்புள்ளது. போதிய ஆதரவு கிடைத்தால், உலக மேடைகளில் வெற்றி பெற்று என் மாநிலத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன்,” என்கிறார் திலோத்தம்மா.
தன்னுடைய சைக்கிளைப் பற்றிக் கூறும் போது, “சுயமாக ஒரு டவுன்ஹில் சைக்கிள் வாங்க முடியவில்லை. சர்வதேச போட்டிக்கு தேவையான ஆரம்பநிலை சைக்கிள் ரூ.2-3 லட்சம் ஆகும். அதுவே நவீன வகை சைக்கிள் வாங்க ரூ.7-8 லட்சம் வரை செலவாகும். அதை வாங்க இயலவில்லை. இந்த முறை என் பயிற்சியாளர் தன்னுடைய சைக்கிளை எனக்காக கொடுத்தார். இந்த விளையாட்டில் மேலும் உயரம் தொட நான் ஸ்பான்சர்களின் ஆதரவை நாடுகிறேன்” என்கிறார்.