March 15, 2023
தண்டோரா குழு
இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியீடு விவாகரத்தில் தேடப்பட்டு வந்த ரவுடி பேபி தமன்னா இன்று தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல் (25) கோவை கோர்ட் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த 2021ம் ஆண்டில் ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் (22) என்பவர் வெட்டி கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இதற்கு பழி வாங்க கோகுல் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்த விவகாரத்தில் குரங்கு ஸ்ரீராம் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்த முக்கிய குற்றவாளிகள் குறித்து நகர போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ரத்தினபுரியில் வசித்து வந்த தமன்னா என்கிற வினோதினி (23) என்பவர் குறித்த தகவல் கிடைத்தது. இவர் பீளமேடு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக கைது செய்யப்பட்டார். இவரை போலீசார் கைது செய்தனர்.
சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த இவர் மேலும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இவர் சமூக வலைதளங்களில் பல்வேறு ஆட்சேபகரமான வீடியோக்கள், ஆயுதங்களுடன் காட்சி தந்த வீடியோக்கள் வெளியிட்டார்.போத்தனூரை சேர்ந்த ரவுடி விக்கு சண்முகம் என்பவருக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா வெளியிட்டார்.கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அவர் விக்கு னா பேன்ஸ் என்ற பெயரில் வெளியிட்ட இந்த வீடியோ வைரலாக பரவியது. இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
போலீசார் இவரை தேடி வந்த நிலையில் இன்று சங்ககிரி பகுதியில் தமன்னா கைது செய்யப்பட்டு கோவை அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் கோவை மத்திய சிறையில் பெண்கள் சிறை பிரிவில் அடைக்கப்பட்டார்.