April 13, 2016 தண்டோரா குழு
புனித ஸ்தலங்களுக்கு தேனிலவு மற்றும் சுற்றுலா வருபவர்களால் தான் கேதார்நாத்தில் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீரழிவுகள் ஏற்பட்டது என சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய முறையில் பேசி பல்வேறு கண்டனங்களை பெறுவதிலும், அடிக்கடி அதிரடி கருத்துக்களை அள்ளி வீசுவதிலும் வல்லவரான சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கடந்த முறை சாய்பாபாவைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அதே போல தற்போது கேதாரிநாத் சேதாரம் குறித்தும் சனி பகவான் கோவிலுக்குள் பெண்கள் செல்வது குறித்தும் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புனித யாத்திரை பயணம் மேற்கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் பலியாகினர்.
இது குறித்து அவர் கூறும்போது, குளிர் பிரதேசத்தின் இனிமையை அனுபவிக்க, சுற்றுலாவிற்கு மற்றும் தேனிலவு செல்வதற்கும் மக்கள் புனிதத்தலங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தான் கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளம் போல பல இடங்களில் இயற்கை பேரிடர் ஏற்படுகிறது எனத் தெரிவித்தார்.
மேலும் புனித ஸ்தலங்களுக்கு இது போல செல்வதை நிறுத்தாவிட்டால் இது போன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சனி பகவான் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததை அவர்களைப் பெருமையாக நினைகிறார்கள், ஆனால் அந்தக் கோயிலுக்கு பெண்கள் சென்றால் நாட்டில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களும், கற்பழிப்புகளும் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், மகாராஸ்டிரா மாநிலத்தில் சில கோயில்களில் சாயிபாபாவை வணங்குகிறார்கள் இதனால் தான் அங்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தக் கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.