March 14, 2017 தண்டோரா குழு
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை முன்னாள் முதலவர் ஒ. பன்னீர்செல்வம் புதன்கிழமை (மார்ச் 15) பிற்பகலில் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்ப்பட்டது குறித்து நேரில் விளக்கவுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கும் சசிகலா தன்னுடைய இரண்டு வழக்கறிஞர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு மார்ச் 1௦ ம் தேதி பதிலளித்தார். சசிகலா அளித்த பதில்களுக்கு ஒ. பன்னீர் செல்வம் அணி விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையும் உத்தரவிட்டது.
அது தொடர்பாக அதிமுக ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த டாக்டர் வி. மைத்ரேயன், “61 பக்கங்களில் எங்களுடைய பதிலைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளோம். இதற்கு முன்பு தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் கொடுத்த மனுவுக்கு சவாலாக சசிகலா கொடுத்த பதிலை நாங்கள் நிராகரித்துள்ளோம். எங்களுடைய பதிலுக்கு ஆதரவவாக உள்ள சாட்சிகளையும் சமர்ப்பித்துள்ளோம். நம்பகமான மனுவை நாங்கள் கொடுத்துள்ளதால், எல்லா தகவல்களையும் நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.
“ஓ.பி.எஸ். தலைமையிலான அணியினர் செவ்வாய்க்கிழமை மாலையில் புதுதில்லிக்குப் பயணமாகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நந்தம் விஸ்வநாதன், கே. பாண்டியராஜன் இருப்பர்” என்று அந்த அணியின் மூத்த தலைவர் தெரிவித்தார்.