April 19, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை பணிகள் போன்றவைகளுக்காக பல்வேறு இடங்களில் மாநகராட்சி சாலைகள் தோண்டப்பட்டு சேதமடைந்துள்ளன.
இதனிடையே கோவை மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை புகைப்படம் எடுத்து அதனை 81476 84653 என்ற மாநகராட்சியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் சேதமடைந்த சாலைகளை புகைப்படம் எடுத்து மாநகராட்சிக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை சுமார் 1200க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘மாநகராட்சியில் சாலை சீரமைக்க ஏற்கனவே ரூ.200 கோடி நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சாலைகளில் பேட்ஜ் ஒர்க் செய்ய முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி மாநகராட்சி சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுப்பும் சாலைகள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்