October 2, 2021 தண்டோரா குழு
கோவை அவினாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடியில், அண்ணல் காந்தியடிகளின் 153-வது பிறந்தநாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு காந்தியடிக்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.
பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்திற்கு 2021-2022ம் ஆண்டிற்கு ரூ.2.58 கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிற்கு கதர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதமாகவும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதமாகவும் சிறப்பு தள்ளுபடியினை அரசு அளித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் அவினாசி சாலையில் உள்ள பிரதான கதரங்காடி, ஆர்.எஸ்.புரம், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி ஆகிய நான்கு இடங்களில் காதிகிராப்ட் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த தள்ளுபடி சலுகையை பயன்படுத்தி கதர் ரகங்கள் அதிகளவில் வாங்கி பொதுமக்கள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விழாவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்அண்ணா, உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) கிரிஐயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.