August 25, 2021 தண்டோரா குழு
சமீபத்தில் நடிகர் ஆர்யா மீது வெளிநாட்டு பெண் ஒருவர் கொடுத்த மோசடி புகாரில், மோசடி வழக்கிற்கும் ஆர்யாவுற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது காவல்துறையினரின் விசாரணையில் உறுதியாகி உள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜெரோம் கோவையில் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடமிருந்து சுமார் 70 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று பின் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறி நடிகர் ஆர்யா மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தரும்படி புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்யாவிடமும் போலீசார் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரின் தொடர் விசாரணையில் நடிகர் ஆர்யாவிற்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.
இது குறித்து நடிகர் ஆர்யாவின் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர்,மோசடி வழக்கிற்கும் ஆர்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும்,விரைவாக விசாரனை செய்து உண்மை குற்றவாளிகளை கைது செய்துள்ள காவல்துறையினருக்கும் ஆர்யாவின் சார்பாக தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.இந்த வழக்கில், சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் சமூக வலைத்தளத்தில் நடிகர் ஆர்யாவாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஜெர்மனி வாழ் இலங்கைத் தமிழ் பெண்ணிடம் பேசிவந்ததும், நடிகர் ஆர்யாவின் பெயரில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 70 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், நடிகர் ஆர்யா பெயரில் போலியான முகநூல் கணக்கு துவங்கி மோசடி செய்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் நடிகர் ஆர்யாவை தவறாக விமர்சனம் செய்தவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய இருக்கின்றோம் என்றார்.
இந்த வழக்கில் தொடர்புடைய,முகமது அர்மான்,முகமது ஹுசைனி பையாக் ஆகிய இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடதக்கது.