December 24, 2016 A.T.ஜாகர்
பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் திறக்கப்படாமல் உள்ள டி.வி.எஸ் காலனி பாதசாரிகள் நடைமேம்பாலத்தை உடனே பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகரின் பிரதான சாலையாக மேட்டுப்பாளையம் சாலை கருத்தப்படுகிறது. நாள்தோறும், ஊட்டி, மேட்டுப்பாளையம், கூடலூர் மைசூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வானக ஓட்டிகள் இச்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அவ்வழியாக சென்று வருகின்றன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகளவில் நடைபெற்று வருகிறது.
அதைபோல் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள டி.வி.எஸ் காலனி பகுதியில் மேட்டுப்பாளையம் சாலையின் குறுக்கே பாரதி பார்க் பகுதிக்கு செல்ல சாலை பிரிகிறது. அப்பகுதியில் அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் டி.வி.எஸ் காலனி பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் பெருமளவு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் அதிவேகமாக செல்லக்கூடிய வாகனங்களால் மாணவி களுக்கும், பாதசாரிகளுக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் விபத்துக்களை தவிர்க்கவும் கோவை மாநகராட்சி சார்பில் கோவை பாரதி பார்க் சாலையில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் அருகே மேட்டுப்பாளையம் சாலையின் குறுக்கே ரூபாய் 75 லட்சம் மதிப்பில் பாதசாரிகள் நடைமேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
எனினும், பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் இன்னும் பொதுமக்கள் பயன்பாடிற்க்காக பாதசாரிகள் நடைமேம்பாலம் திறக்கப் படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக திறக்காமல் இருந்த நிலையில் தேர்தல் முடிந்து பல மாதங்களாகியும் நடைபாதை மேம்பாலம் திறக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து கல்லூரி மாணவி ஜெ.பிரித்தி கூறியதாவது;
மேட்டுப்பாளையம் துடியலூர், காந்திபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவிகள் சாலைகளை கடந்து தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும். அச்சாலையில் வாகனங்கங்கள் அதிகளவு வருவதால் சாலையை கடக்க நேரம் ஆகிறது. சில சமயங்களில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் விரைந்து இந்த நடைப்பாலத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்றார்.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறும்போது,
டி.வி.எஸ் காலனி நடைமேம்பாலப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கூடிய விரைவில் திறக்கப்படும் என்றார்.
காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகங்கள், கல்லூரி மற்றும் கடைகளுக்கு செல்வோர் என அதிகளவில் பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் செல்வதில் நீண்ட நேரம் ஆகின்றது. பாதசாரிகள் நடைப்பாலம் வழியாக சென்றால் இது தவிர்க்கப்படும். விலைமதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்ற விரைவில் டி.வி.எஸ் காலனி நடைமேம்பாலம் திறக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.