March 10, 2017
தண்டோரா குழு
தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான காணொளியைத் திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்குமாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் சட்டப் பேரவைச் செயலர் ஜமாலுதீன் வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்குதல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதில் எந்த விதி மீறலும் இல்லை. ரகசிய முறையில்தான் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று பேரவை விதிகளில் இடமில்லை” என்று தெரிவித்தார்.
“சட்டப் பேரவைச் செயலர் கொடுத்த பதில் மனு குறித்து திமுக கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், “அங்கு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சம்பந்தமான காணொளியை மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.