February 21, 2017 தண்டோரா குழு
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று தி.மு.க. செயல் தலைவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது பெரும்பான்மையை நிரூபிக்கும் பொருட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப் பேரவை கடந்த 18-ம் தேதி கூடியது. அப்போது ஏற்பட்ட கடும் அமளியில், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவர்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
“எதிர்க்கட்சியினர் இல்லாமல் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே அது செல்லாது” என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் ஆர். மகாதேவன் முன்னிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி மனு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் மீதான விசாரணை புதன்கிழமை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.