March 25, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம் நரசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.
அதன்பின், அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் மாணவ – மாணவியர் நலன்கருதி பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிப்பை படித்து செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற ஒரு சிறப்பு வாய்ந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.
மேலும், 10ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ படிப்பை படித்து செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த கூடிய பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார்.
நரசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளவர்களுக்கும், இப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இப்பள்ளியில் கூடுதல் பாடப் பிரிவுகளை துவங்குவதற்கு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிசெல்வன், போலீஸ் எஸ்பி பத்ரிநாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, தலைமை ஆசிரியர் பூங்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.