July 17, 2022 தண்டோரா குழு
இயக்குனர் பார்த்திபன் இயக்கி அவர் நடிப்பில் வெளிவந்துள்ள உலக சினிமாவின் முதல் non- linear படமான “இரவின் நிழல்” கடந்த 15ம் திரையரங்குகளில் வெளியானது.
அன்றிலிருந்து இயக்குநர் பார்த்திபன் மற்றும் படக்குழுவினர் திரையரங்குகளுக்கு சென்று பார்வையாளர்களை சந்தித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கேஜி (தனியார்) திரையரங்குற்கு வருகை புரிந்த இப்படத்தின் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மற்றும் நடிகை பிரிகிதா பார்வையாளர்களை சந்தித்து திரைப்படம் குறித்து கேட்டறிந்து திரைப்படம் எடுக்கப்படும் பொழுது இருந்த சவால்களையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,
இரவின் நிழல் ஒரு புது முயற்சி என்றும் இது போன்ற படத்தை எடுப்பதற்கு முயற்சி செய்வதே மிகவும் கடினம் என தெரிவித்தார். மக்களுக்கு என்ன பிடிக்குமோ இதற்கு முன்பு எது பிடித்திருந்ததோ அதை மட்டுமே வைத்து படம் எடுத்து பணம் சம்பாதித்து செல்லலாம் என்பதை விட புதிதாக மக்களின் ரசனைக்கு தகுந்தாற் போல் புது முயற்சி மேற்கொள்ளலாம் என எடுக்கப்பட்ட படம் தான் இப்படம் என தெரிவித்தார்.
இப்படத்தின் கதை என்பது ஒரு சராசரி கதை அல்ல எனவும் அருவருப்பாக பிறந்த ஒரு மனிதரின் வாழ்க்கை எனவும் தெரிவித்தார். பத்திரிக்கை செய்தி படிக்கும் பொழுது அதிர்ச்சிக்குரிய செய்திகளை எல்லாம் இதில் படமாக்கி இருப்பேன் எனவும் கூறினார். நான் ஒரு பத்திரிக்கையாளராகவோ ஊடகவியலாளராகவோ இருந்தால் இப்படத்தின் பிள்ஸ் பாண்ட்ஸ் மட்டுமே எடுத்து கூறியிருப்பேன் என தெரிவித்தார்.
இப்படம் மக்கள் பலருக்கும் தெரிய வேண்டும் கமர்சியலாக இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் எனவும் தெரிவித்தார். இப்படத்தை இளைஞர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள் எனவும் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் எனவும் தெரிவித்தார்.அதுமட்டுமின்றி பத்திரிக்கையாளர்களின் விமர்சனத்தினால் தான் இவ்வளவு கூட்டம் வந்தது எனவும் தெரிவித்தார்.
இது போன்ற சினிமாவிற்கு ஆதரவு தர வேண்டும் என்பது எனது வேண்டுகோள் எனவும் கேட்டுக்கொண்டார். மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்ட இந்த படம் மிக பெரிய வெற்றியை அடைந்தால்தான் தயாரிப்பாளர்கள் இது போன்ற படங்களை எடுக்க முன்வருவார்கள் என தெரிவித்தார். இது போன்ற படம் எடுத்து சரியாக ஓடவில்லை என்றால் புது முயற்சியை எடுப்பவர்கள் தோற்றுவிடுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் ஆங்கில படத்தை பார்க்கும் போது இருக்கின்ற தெளிவு தமிழ் படத்தை பார்க்கும் போது இருப்பதில்லை எனவும் தமிழ் படத்தை மட்டும் தனி கலாச்சாரத்திற்குள் வைத்து பார்க்கிறோம் என தெரிவித்தார். ஆங்கில படத்தை பார்க்க வேறு கண்கள் தமிழ் படத்தை பார்க்க வேறு கண்கள் என கூறிய அவர் அனைத்து இடங்களிலும் வன்முறை ஒரே மாதிரிதான் நடப்பதாக தெரிவித்தார். மேலும் ஆண்கள் சிலர் பெண்கள் எப்படி இந்த படத்தை பார்ப்பார்கள் என நினைக்கிறார்கள் என கூறிய அவர் எதற்காக பெண்களுக்கு ஒரு வரையறையை ஆண்கள் வகுக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
தவறான சில விமர்சனங்களால் எதார்த்தமாக ஒரு படத்தை எடுக்க முயற்சிக்கும் பொழுது மனதிற்கு கஷ்டமாக உள்ளது எனக் கூறினார். தற்பொழுது படத்தின் வருமானத்தை தான் கொண்டாடுகிறோமே தவிர படத்தின் தரத்தை கொண்டாடுவதில்லை என தெரிவித்தார். இந்தத் திரைப்படம் வெற்றி அடையும் பொழுது என்னைவிட திறமை வாய்ந்தவர்களுக்கு இத் திரைப்படம் வழிவகுக்கும் என தெரிவித்தார் மேலும் புதிதாக முயற்சி செய்யும்பொழுது அதில் கிடைக்கும் வெற்றியின் மகிழ்ச்சி வேறு என கூறினார். நல்ல படங்கள் வரும்பொழுது ஒவ்வொரு முறையும் அதனை கூறிக் கூறி நல்ல படம் என சொல்லும் கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்த அவர் 10 படங்கள் நல்ல படங்கள் வந்தால் இந்நிலை மாறிவிடும் என தெரிவித்தார்.
இந்த படத்தில் இருக்கும் கருத்தை விட படம் எடுக்கும் பொழுது கூறும் கருத்து ” தோல்விகளை கண்டு துவள வேண்டாம் அடுத்த நிமிடம் நமதே என்று நாம் நினைக்க வேண்டும் என்பதுதான்” என தெரிவித்தார். பல்வேறு நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது அந்த காலத்தில் இருந்தே இருந்து வந்தது என தெரிவித்த அவர் நல்ல படங்களை பாருங்கள் என்பதே எனது விருப்பம் எனக் கூறினார்.
இளையராஜாவிற்கு எம்பி பதவி வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் இளையராஜா Music of Paradise என்று நான் பலமுறை கூறியுள்ளேன் எனவே அவருக்கு இந்த எம்பி பதவி என்பது மிகப்பெரிய பதவி இல்லை என்பது என்னுடைய அபிப்பிராயம் என தெரிவித்தார். நல்ல படங்கள் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தற்பொழுது கிடைப்பதில்லை என கூறினார்.