March 31, 2022 தண்டோரா குழு
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கம் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
நாட்டில் தொழில்துறையின் நிலை மோசமான நிலையில் உள்ளது. ரூ.500, ரூ.1000 பண மதிப்பு இழக்க செய்தது, ஜி.எஸ்.டி கொண்டு வந்தது, கொரோனாவால் ஊரடங்கு, மூலப்பொருள்களின் விலை கடும் உயர்வு இவையாவும் எம்.எஸ்.எம்.இ. என்று சொல்லப்படும் குறு சிறு, நடுத்தர தொழில்களை சுனாமியில் சிக்கியது போல் சூறையாடப்பட்டன. நாடு முழுவதும் குறு சிறு தொழில் நடத்துபவர்கள் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் வங்கியாளர்களாளும், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டியாளர்களாலும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
மூலப்பொருள் விலையேற்றத்தால் ஆர்டர்கள் இல்லாமலும், கிடைக்கும் ஆடர்களுக்கு உரிய கூலி கிடைக்காமலும் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.இதில் இருந்து எம்.எஸ்.எம்.இ. தொழில்துறையினரை காப்பாற்ற ரூ.25 லட்சத்துக்கு கீழ் கடன் பெற்றவர்களின் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். வங்கியில் கடன் கிடைக்க பெறாத குறுந் தொழில்களுக்கு தனி கடன் திட்டத்தை உடனே மானியத்துடன் செயல்படுத்த வேண்டும். நாட்டில் தொழில் சீராக நடத்துவதற்கு மூலப்பொருள்களின் விலையேற்றத்தை தடுக்க, விலை நிர்ணய கமிட்டியை உடனடியாக அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைகளை நீக்க அரசு கருத்துகளை கேட்க வேண்டும்.
இதே நிலை நீடித்தால் வேலையின்மை அதிகரிக்கம். பசி, பட்டினி சாவுகள் அதிகரிக்கும். கடன் சுமை தாங்க முடியாமல் குறுந் தொழில் முனைவோர்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்படுவார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குறு சிறு தொழில் முனைவோர்களின் நிலைமையை எடுத்து சொல்ல வேண்டும்.
இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.