March 4, 2016 வெங்கி சதீஷ்
இந்திய அளவில் வன விலங்குகளின் மீதான வன்முறை மற்றும் அவற்றைக் கொலை செய்வதைத் தடுக்கும் சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதை அடுத்து வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மிகக் குறைவான உயரம் உள்ள மலைகளில் வாழும் மலையாடுகள், காட்டெருமைகள், மான் மற்றும் அபூர்வ வகை குரங்குகள் ஆகியவை தற்போது வயல் வெளிகளிலும் வீட்டருகிலும் சுற்றித் திரிவது வாடிக்கையாக மாறிவிட்டது.
இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களில் மட்டுமே சாலைகளை கடக்க முயன்று இறந்த மான்களின் எண்ணிக்கை 3, மேலும் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் வெளிநாட்டுப் பயணிகளையும் கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளமான கொடைக்கானலில் பேருந்து நிலையத்தில் வந்த காட்டெருமை ஒன்று அங்கு இருந்த சுற்றுலா பயணிகளைப் பயமுறுத்தியதோடு, ஒரு சிலரை விரட்டியும் சென்றது. இது குறித்து பேசிய வியாபாரி சரவணன், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
சமீப காலமாகத்தான் இது போன்ற காட்டெருமைகள் ஆள் நடமாட்டம் உள்ள இடங்களில் சுற்றித்திரிகின்றன எனத் தெரிவித்தார். காட்டெருமைகள் இயற்கையாக வனப்பகுதிகளில் தீவனம் இல்லாவிட்டாலோ, நீர் இல்லாவிட்டாலோ தான் வனத்தை விட்டு வெளிவரும் அதுவும் மனித நடமாட்டம் உள்ள இடத்தில் காட்டெருமைகள் வருவது அபூர்வம்.
ஆனால் தற்போது கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் சர்வ சாதாரணமாகக் காட்டெருமைகள் மேய்ந்து வருவதைக் காணமுடிகிறது எனத் தெரிவித்த வனவிலங்கு ஆர்வலர் பிரபு குமார், இதற்குக் காரணம் கொடைக்கானல் முழுவதும் தற்போது ரியல்எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறுவது மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரிக்கும் பெரிய மற்றும் சிறிய உணவு விடுதிகள் அவற்றில் உருவாகும் உணவு கழிவு மற்றும் வாழை இலை ஆகியவற்றை அதற்கு உரிய இடத்தில் கொட்டுவதற்கு பதில் தெருவிலோ, அல்லது ஏதாவது எஸ்டேட் ஓரங்களிலோ கொட்டிவிடுகின்றனர்.
அவற்றை உண்டு பழகிய காட்டெருமைகள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் போதிய உணவு கிடைப்பதால் சாலைகளுக்கும் உணவு விடுதிகள் அதிகளவு இருக்கும் பகுதிகளுக்கும் வருகின்றன. மேலும் இதனால் மனிதர்களுக்கும் காட்டெருமைகளுக்குமான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இரவில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு ஒரே தீர்வு உணவு விடுதிகள் உணவு மீதங்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இல்லையெனில் காட்டெருமைகள் அனைத்தும் இன்னும் சில காலத்தில் வீட்டெருமை போல மாறிவிடும் எனவும் பின்னர் சிறிது சிறிதாக இனமே அழியும் அவலம் ஏற்படும் எனவும் கவலை தெரிவித்தார்.