January 20, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரி மதுரை அலங்காநல்லூரில் 5-வது நாளாகவும், சென்னை, நெல்லை, கோவை, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் 4-வது நாளாகவும் மாணவர்களுடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவுகள் பெருகி கொண்டே வருகின்றன. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், மக்கள் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மெரீனா கடற்கரைக்கு வருகின்றனர். “அடையாள அட்டை வேண்டாம் அடையாளம்தான் வேண்டும்” (ஜல்லிக்கட்டுதான் வேண்டும், அரசாங்க அடையாள அட்டைகள் வேண்டாம்) என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே போல் கோவை வ.உ.சி. மைதானத்தில் மாணவர்கள், மக்கள் வாயில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வரை கலைந்து செல்ல மாட்டோம்” என அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலகப்புகழ் பெற்றது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர். அங்கு திங்கட்கிழமை முதல் மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். “ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்“ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதே போல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. “ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்படும. போராட்டங்களைக் கைவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும், ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் வரை போராட்டங்கள் தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.