March 1, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம் அன்னுார் அருகே கணேசபுரத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 33), வேலை வாய்ப்பு சார்ந்த இளையதளத்தில் அதிக தொகை கமிஷனாக கிடைக்கும் என குறிப்பிட்டிருந்ததை நம்பி கம்ப்யூட்டர், மொபைல் போன், லேப்டாப் என விலை உயர்ந்த பொருட்களை வாங்கி விற்பனை செய்துள்ளார்.
மேலும் ரூ.7.23 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். இந்நிலையில் கமிஷன் தொகை தரமால் அந்நிறுவனம் இழுத்தடித்துள்ளது. இதனை அடுத்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் சரண்யா புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல் அன்னூரை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் இவர் ‘பண்ட் மேளா’ எனும் செயலி வாயிலாக, குறிப்பிட்ட தொகை ‘டெபாசிட்’ செய்தால் அதிக தொகை கமிஷனாக கிடைக்கும் என்று கூறியதை நம்பி, ரூ.5.40 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். கமிஷன் இரு மடங்காக கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி தராமல் ஏமாற்றியுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல் கோவையை சேர்ந்தவர் அருள்ராஜ் அரசு பள்ளி ஆசிரியர்.இவரது கிரெடிட் கார்டில், இவருக்கே தெரியாமல், ரூ.2.22 லட்சம் பல்வேறு தவணைகளில் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கோவில்பாளையம் அருகே குன்னத்துாரை சேர்ந்த ஹர்சவர்தன். இரும்பு வியாபாரி.இவர் கொல்கத்தாவை சேர்ந்த தனியார் ஸ்டீல் நிறுவனத்திடம் பொருட்களை வாங்கி குறிப்பிட்ட இ–மெயில் முகவரி மூலம் பல ஆண்டுகளாக பணம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதே நிறுவனத்தின் பெயரில் வேறொரு இ–மெயில் முகவரியில் இருந்து பணம் செலுத்துமாறு தகவல் வந்துள்ளது. அதை நம்பி ரூ. 10 லட்சம் லட்சம் செலுத்தியுள்ளார். இவரது புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.