November 22, 2021 தண்டோரா குழு
கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.89.73 கோடி மதிப்பில் 128 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின்,
இந்த விழாவை நிகழ்ச்சியாக அல்லாமல் மாநாடு போல் நடத்துகிறார் செந்தில்பாலாஜி. மக்கள் பயன்பெறும் வகையில் இதனை ஏற்பாடு செய்த செந்தில் பாலாஜியையும், மக்கள் பிரதிநிதிகளையும்,அரசு அலுவலர்களையும் வாழ்த்துகிறேன். சட்டமன்ற தேர்தலில் கோவையில் எதிர்பாத்த அளவில் வெற்றி பெற முடியவில்லை.
வெற்றியை தவறவிட்டாலும் கோவையில் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எனது சான்றிதழை வாங்கிவிட்டு கலைஞரின் நினைவிடத்திற்கு சென்றேன்.அப்போது பத்திரிகையாளர்கள் சூழ்ந்து என்னிடம் கேள்வி எழுப்பினர்.அப்போது வெற்றி தந்த மக்களுக்கு நன்றி கூறினேன்.அதோடு ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்லாது ஓட்டு போடாதவர்களுக்கும் பணியாற்றுவேன் என்று கூறினேன். அதனை தொடர்ந்து கடைபிடிப்பேன்.
அதன்படிதான் கோவைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியை நியமித்துள்ளேன். எந்தெந்த மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதி இல்லையோ அங்கெல்லாம் அமைச்சர்களை நியமித்துள்ளேன்.
கோவையில் லட்சக்கணக்கான மக்களை சந்தித்து கோரிக்கை பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம்.
மனு அளித்தால் திமுக நடவடிக்கை எடுக்கும். சில பணிகள் கால தாமதமாக கூட முடியும். மனுக்கள மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க முழு தகுதி எனக்கு உள்ளது. தேர்தலுக்கு முன் அனைத்து தொகுதியிலும் சென்று மனு பெற்றேன். ஆட்சிக்கு வந்தபின் மனு பெட்டியை தான் திறப்பேன் என்றேன். ஆனால் என்னால் பெட்டியை திறக்க முடியாது என்றனர்.சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பதை தாரகமாக கொண்டு செயல்பட்டு அனைத்து பெட்டிகளை திறந்து லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்தோம்.
ஸ்டாலின் 100 நாட்களில் எனக்கு தீர்வு கொடுத்தார் என்று மக்கள் கூறுகின்றனர். மனு மேல் நடவடிக்கைகள் எடுக்காத மனுக்களுக்கு விளக்கம் கொடுத்தோம். இப்போதும் மனுக்களை வாங்கிவிட்டு தான் வந்தேன். இது அனைத்தும் நிறைவேற்றப்படும். பல கோடி மதிப்பு திட்டங்களை செய்தாலும், தனி மனித கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது முக்கியம்.
இந்த அரசு அத்தகைய அரசாக இருக்கும். கோவைக்கு ஏராள திட்டங்களை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாகத்திற்கு ரூ. 1132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விரைவில் நிலத்தை கையகப்படுத்த பணிகள் துவங்கும்.
கோவை மாநகராட்சியில் 2 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடி நீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவையில் திமுக ஆட்சியில் திட்ட சாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆட்சியில் எந்த பணியும் இல்லை.
அதன்படி 5 திட்ட சாலைகள் மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பில் பணிகள் துவங்கும்.
மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட வெள்ளகிணறு, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டியில் பாதளசாக்கடை திட்டங்கள் ரூ. 309 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.கோவை நகரின் மையத்தில் உள்ள சிறைச்சாலை நகரின் வெளியே கொண்டு செல்லப்படும். காந்திபுரத்தில் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்த ரூ.11 கோடி செலவில் கூடுதல் பணிகள் தொடங்கும்.
மக்களுக்கு மருத்துவ வசதி அளிக்க 16 கோடியில் 63 நல்வாழ்வு மையங்களும், 3 மருத்துவ ஆய்வு கூடம் கட்டப்பட உள்ளது.சாலை விளக்கு இல்லாத இடத்தில் ரூ20 கோடியில் விளக்குகள் அமைக்கப்படும்.இதற்கு விரைவில் அரசாணை ஒதுக்கி நிதி ஒதுக்கி மக்களிடம் ஒப்படைக்க உள்ளோம்.சென்னை போல் கோவை வளர்ச்சிக்கு முயத்துவம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. கோவை நகர்ப்புற வளர்ச்சிக்குழும ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
அதன்படி அரசாணை வெளியிடப்பட்டது. திட்டங்களை செயல்படுத்த அமைச்சர் செந்தில்பாலாஜியை நியமித்தோம். உழைக்க கூடியவரை தேர்வு செய்து உங்களுக்கு ஒப்படைத்தோம். கோவையை அனைத்து உட்கட்டமைப்பையும் கொண்ட மாவட்டமாக உருவாக்குவோம்.
தமிழகத்திற்கு ஏற்றுமதி கொடுக்கும் மாவட்டம் கோவை, தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து, லட்சக்கணக்கான தொழிலாளிகள் வாழ்வழிக்கும் மாவட்டம் இது தான். இது போல் தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டத்திற்கும் வேண்டும் என்பது தஎன் ஆசை.இந்தியாவில் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். இந்தியாவின் தொழில் முகவரியாக தமிழகம் மாற வேண்டும்.
கோவையில் நாளை தொழில் முனைவோர் மாநாடு நடக்க உள்ளது. இதில் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை உருவகும். இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். அதில் முதலிடம் கோவைக்கு தான்.
செயல்தான் எனது பணி. கோவை மாவட்டம் தமிழகத்தில் அனைத்து துறையிலும் தலைசிறந்த மாவட்டமாக இருக்கிறது. மாவட்டத்தை இன்னும் மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.