November 27, 2017
நான் தான் ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரி பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில்
பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற 37 வயது பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரியும் டி.என்.ஏ பரிசோதனைக்காக ஜெயலலிதா உடலையும் மெரினாவில் இருந்து தோண்டி எடுக்கவும் அம்ருதா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெ.வுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும்.1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி, மறைந்த ஜெயலலிதாவின் மகளாகப் பிறந்தேன்.ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார்.ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. அம்ருதாவின் வளர்ப்பு தாயான ஜெயலலிதாவின் சகோதரி ஷைலஜா 2015-ம் ஆண்டு இறந்து விட்டார். வளர்ப்பு தந்தையான சாரதி இந்த ஆண்டு மார்ச் 20-ம் தேதி இறந்து விட்டார். இவ்வாறு அம்ருதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி ஏற்கனவே ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி அம்ருதா மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.